ஜோதிட தகவல்: நவராத்திரி

Thursday 25 September 2014
ஜோதிட தகவல்: நவராத்திரி







நவராத்திரி இரண்டாம் நாளான இன்று [25-9-14]சம்பந்தருக்கு தன திரு 
முலை பாலை கறந்து ஊட்டிய அன்னை பார்வதி சீர்காழி பெரிய நாயகி 
[திருநிலைநாயகி] திருபாதம் பணிவோம்.


சீர்காழி பெரிய நாயகி [திருநிலைநாயகி] பிரமபுரீஸ்வரர், தோணியப்பர், 
சட்டைநாதர் திருகோயில் ,சட்டைநாதர் தேவஸ்தானம் சீர்காழி.இது, 
தருமைபுர ஆதீனத்துக்குச் சொந்தமானது. சட்டைநாத சுவாமி இங்கு 
முக்கிய தெய்வமாகும். இரண்யனைக் கொன்ற நரசிங்கத்தைத் தடிந்து, 
அதன் தோலைச் சட்டையாகப் போர்த்துக் கொண்டதால், சுவாமித் 
இத்திருநாமத்தைக் கொண்டார்.பைரவர் தலைவர் சட்டைநாதர். 


இவர் சிவனின் அம்சங்களில் பைரவ அம்சமாக திகழ்கிறார்.பிரம்மா, 
விஷ்ணு, சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, மூலவர், உற்சவர் என 
அனைவருமே மூலஸ்தானத்தில் கைலாய காட்சியில் உள்ள ஒரே தலம் 
சீர்காழி தான். காசியை காட்டிலும் மிகப்பெரிய பைரவ  க்ஷேத்திரம்.எனவே தான் காழியில் பாதி காசி என்பர். 


குரு, இலிங்க, சங்கம வழிபாட்டு முறையில் பிரம்மன் பூசித்த 
பிரமபுரீஸ்வரர் இலிங்கமாகவும், ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் 
தந்தருளிய தோணியப்பர் குருமூர்த்தமாகவும், சட்டைநாதர் சங்கம 
வடிவினராகவும் , ஐந்தொழில்களைச் செய்தருளுவதற்கு 
இலிங்கமாகவும், பக்குவ ஆன்மாக்களுக்கு உபதேசம் புரிந்து, 
சிவஞானச்செல்வத்தை அளிப்பதற்குக் குருவடிவமாயும், பேரின்ப 
சித்திகளை அருளுவதற்கு சங்கம வடிவாயும், ஈசன் உள்ளார்.


திருஞானசம்பந்தர் திருஅவதாரம் செய்த திருத்தலம் 
இக்கோயிலுக்குள்ளேயே திருஞானசம்பந்தருக்கு தனி சன்னதி உள்ளது. 
இங்கு சம்பந்தர் மூலவராக உள்ளார். திருநாவுக்கரசர், 
திருஞானசம்பந்தரின் நட்பைப் பெற்று, அவரால் அப்பர் எனப் பெயரும் 
பெற்றப் பதி. சுந்தரர் இங்கு வந்தபோது, இஃது, சம்பந்தப்பெருமான் 
அவதரித்தபதி என்று மிதிப்பதற்கு அஞ்சி நகர்புறத்து நின்று பாட, 
இறைவன் காட்சி தந்த பதி.திருஞான சம்பந்தர் சமயக் குரவர்களில் ஒருவர். 


இவர் சிதம்பரம் அருகிலுள்ள சீர்காழியில் சிவபாத இருதயர் பகவதி 
அம்மையாருக்கு புத்திரராகப் பிறந்தார். இவருக்கு மூன்று வயதாகும் 
பொழுது சிவபாத இருதயர் சம்பந்தரைக் கோவில் குளக்கரையில் அமர்த்தி 
விட்டுக் குளித்தார். சிறிது நேரத்தில் சம்பந்தர் தந்தையைக் காணாமல் 
அழுதார். இதைக் கோவிலிலிருந்த தோணியப்ப பெருமானும் 
உமையம்மையும் பார்த்தனர்.  


குழந்தை பசியால் அழுகின்றது என்று எண்ணி ,அம்பிகையும் பொன் 
கிண்ணத்தில் தன் திருமுலை பாலை கறந்து சிவஞானம் குழைத்துக் 
குழந்தைக்கு ஞானப் பால் ஊட்டினார்.


அன்றிலிருந்து சம்பந்தர் "ஞான சமபந்தரானார்", குளித்து முடித்து வந்த 
தந்தை தன் குழந்தையின் வாயில் பால் துளி இருப்பதைப் பார்த்தார்.  
பால் கொடுத்தது யார் எனக் கேட்க கோவிலின் கோபுரத்து அருகே 
சிவனும் பார்வதியுடன் இருந்ததைக் காட்டினார்.  

ஞானசம்பந்தர் அவர்களைப் பார்த்து,தனக்குப் பாலளித்த 
உமைஅம்மையின் தோடணிந்த திருச்செவியைச் சிறப்பிக்கும் முறையில்  
தோடுடைய செவியன்` என்ற முதற்பெரும் பாடலால் தனக்குப் பாலளித்த 
கடவுளின் அடையாளங்களைச் சுட்டித் திருப் பதிகம் 
அருளிச்செய்தார்.அன்று முதல் திருமுறை பதிகம்கள் பல பாடி ,ஈசன் 
அருளால் அற்புதம்கள் பல நிகழ்த்திநார் .


சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு, சீர்காழி  
பெரியநாயகி[திருநிலைநாயகி] அம்மை குழந்தை சம்பந்தருக்கு 
ஞானப்பால் ஊட்டிய வரலாற்றை நினைவு படுத்தும் 
விதமாக, சீர்காழியில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் இரண்டாம் 
நாள் திருவிழா திருமுலைப்பால் உற்சவம் என்று கொண்டாடப்படுகிறது. 
மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், கணநாதர், நம்பியாண்டார் நம்பிகள், 
பட்டினத்தார், சேக்கிழார், அருணாசல கவிராயர், மாரிமுத்தா பிள்ளை, 
முத்து தாண்டவ தீட்சிதர் ஆகியோரும்கூட இத்தலத்தின் மீது பாடல்கள் 
பாடியுள்ளனர்.


சம்பந்தர் தனது பதிகம் தோறும் சிவன் இராவணன் செருக்கை 
அடக்கியதையும், சிவனுக்கு மாலும் அயனும் தாழ்ந்ததையும் 
கூறுவதோடு, சமணக் கொள்கைகளையும் சாடுகின்றார். 


பதிக இறுதியில் தன் பெயரை இணைத்துப்பாடி புதுமுறையினைப் 
புகுத்தியுள்ளார்.தமிழகமெங்கும் செந்தமிழோசையை முழங்கச்செய்து 
சைவ சமயத்தோடு தமிழ் வளமும் மிளிரச் செய்தவர் திருஞானசம்பந்தர் 
ஆவார். சம்பந்தரின் சைவம்,தமிழ் மூலம் நம் மக்களையும் கலி 
காலத்தில் வாழ்விக்க சம்பந்தர் மூலம் நம் மூலபரம் பொருளாம் ஈசனை 
திருமுறைகள் மூலம் பாடி ,நாம் அருள் வரம்கள் பல பெற்று நல் வாழ்வு 
வாழ வழிகாட்டிய சீர்காழி பெரிய நாயகி [திருநிலைநாயகி] திருபாததை 
நவராத்திரி ரெண்டாம் நாளான இன்று [25-9-14] நாம் கெட்டியாக பிடித்து 
நம் வாழ்கை பாதையை சகல சம்பத்துகளுடன் அமைத்து கொள் 
ஓம்........
"வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்
பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர் பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்".....



தகவல் அளித்தவர்,

விஜய் பெரியசாமி அவர்கள்,
சென்னை.

0 comments:

Post a Comment