மஹாளய பக்‌ஷம்(23.09.2014)

Monday 22 September 2014
மஹாளய பக்‌ஷம்(23.09.2014) 





1 பக்ஷம் என்றால் 15 நாட்கள்; மஹாளயம் என்பது பித்ரு தேவதைகள் வசிக்கும் இடம். பித்ருக்கள் பூமிக்கு வந்து நம்முடன் சூக்ஷ்ம ரூபத்தில் வசிக்கும் 15 நாட்களே மஹாளய பக்ஷம் எனப்படும். அதாவது புரட்டாசி மாத அமாவாசைக்கு முந்தைய 14 நாட்களை மாஹாளய பக்ஷம் என்று பெயர்.

புரட்டாசி அமாவாசையை மஹாளய அமாவாசை என்று சொல்கிறோம். இந்த நாட்களில் நமது மூதாதையர்களான பித்ருக்கள் பூலோகத்திற்கு சூக்ஷம ரூபத்தில் வந்து நாம் அளிக்கும் பித்ரு தர்பணங்களை நேரடியாக எற்பவர்களாகிறார்கள். 

பொதுவாக பித்ருக்கள் எல்லா நாட்களிலும் பூலோகம் வர இயலாதாம். ஒவ்வொரு அமாவாசை, மாசப்பிறப்பு மற்றும் அவர்கள் மறைந்த திதி நாட்கள் மற்றும் மஹாளய பக்ஷத்தில் மட்டுமே அவர்களால் பூலோகத்திற்கு வர இயலுமாம். 


அதனால்தான் அவர்கள் வரும் தினங்களில் பித்ரு பூஜையை செய்யச் சொல்லியிருக்கிறார்கள் மஹரிஷிகள். புரட்டாசி அமாவாசையன்று சகல லோகங்களிலும் இருக்கும் மஹரிஷிகள், தேவர்கள் மற்றும் எல்லா ஜீவன்களும் பூலோகத்திற்கு வந்து பித்ரு தர்பணம் செய்வதாகச் சொல்லப்படுகிறது. 

பித்ருக்களுக்கு உணவாவது எள் கலந்த நீரே. இதனை மந்திர பூர்வமாக அவரவர் பெயர் சொல்லி அளிப்பதன் மூலம் அவர்களது ப்ரீதிக்குப் பாத்திரமாகிறோம். இறந்தவர்கள் எங்கோ மறுபடி பிறந்திருப்பார்களே பின் எதற்கு இவை என்று ஒரு கேள்வி வரும்.

அவ்வாறு பிறந்தாலும், மீண்டும் பிறந்த அந்த ஜீவனுக்கு அந்த நேரத்தில் வேண்டிய பொருளாக நாம் அளிக்கும் எள்ளும்-நீரும் மாறிவிடும் என்கிறார்கள். இன்னொரு கருத்துப்படி, நமது முன்னோர்கள் மற்றொரு பிறவி எடுத்தாலும்,நாம் செய்யும் சிராத்தம்/தர்பணம்போன்றவை ஸ்ரீவிஷ்ணுவுக்குப் ப்ரீதியாகிவிடுவதாகவும், செய்யத் தகுதியுடையவன் செய்யாது விடக்கூடாது என்பது பெரியவர்கள் கூற்று.

மஹாளய அமாவாசை தினத்தன்று பித்ருக்கள்,குறிப்பாக ஆயுதம் மூலமாககொல்லப்பட்டோ, தற்கொலை செய்து கொண்டோ, அல்லது விபத்து மூலமாக அகாலமரணடைந்து போன பித்ருக்களுக்கு முக்தி கிடைக்க வேண்டும் என்பதற்காக பூஜைசெய்யும் நாளாகும்.

நம்மை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர், உறவினர்கள், முன்னோர்கள் எல்லோருமே நம்மையும், நம் குலத்தையும் வாழ வைக்கவே செய்வார்கள். ஒரு போதும் சாபமிடமாட்டார்கள். பூமியில் நாம் அவர்களுக்கு செய்ய வேண்டிய தர்ப்பணம், சிரார்த்தம் ஆகியவற்றை செய்யாமல் விட்டோமானால் அவர்களுக்கு சேர வேண்டிய உணவு கிடைக்காமல் போய்விடும். அதனால் அவர்கள் துன்பம் அடைவார்கள். அதுவே பித்ரு சாபமாக ஆகிவிடும். பித்ரு சாபத்தை ஜாதகங்களில் ஆராய்ந்து தெரிந்து கொள்ளலாம்.


மஹாளய அமாவாசை தினத்தன்று பிராமணர்களுக்கு அன்னதானம் செய்வது சிறந்தது என்று கூறப்படுகிறது.

பித்ரு தேவதைகளுக்கான நமது கடமைகளை சிரத்தையுடன் நிறைவேற்றுவோம். வாழ்வில் சகல வளங்களும் பெறுவோம். 




0 comments:

Post a Comment