தசா/புத்தி பலன்: விரய பாவகம்

Sunday 28 September 2014
பன்னிரண்டாமாதிபன் தசை/புத்தி




லக்கினத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் உடல் நலக்குறைவும் கபம் சம்பந்தமான ரோகங்களும் கல்வியும் செல்வமும் இல்லாத தரித்திர வாழ்க்கையும் உண்டாகும் ஆண்மைக்குறைவு, தாம்பத்திய சுகம் இலலாமையும் உண்டாகும் தன்னம்பிக்கை இன்மையும், சுயமுயற்சி இன்மையும் வாழ்க்கையில் விரக்தியும் உண்டாகும்.

இரண்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தரித்திர வாழ்க்கையும், தன்னுடைய வீடு மனைவி எல்லாவற்றையும் பிரிந்து சுற்றி அலையும் வாழ்க்கையும் விஷ்ணு பக்தியும் தயாள சிந்தையும் உண்டாகும்.

மூன்றாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் கோழைத்தனமும் எதிலும் அக்கறையற்ற தன்மையும் சகோதரர் இல்லாமையும் தனக்கு உதவி இல்லாமையும் தானே தனியாக வயிறு வளர்த்துக்கொண்டு போகும் அவல நிலைமையும் உண்டாகும்.

நான்காம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தாய்க்கு கண்டமும் தரித்திர வாழ்க்கையும் வீடு வாசல் சொத்து சுகங்களை இழந்து விடும்படியான நிலைமையும் கஷ்டங்களும் துக்கங்களும் உண்டாகும்.

ஐந்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தாம்பத்திய வாழ்க்கையில் அக்கறை இல்லாமையும் புத்திர நஷ்டங்களும் புத்திர பாக்கியக் குறைவும் கல்வி இன்மையும் கெட்ட வழிகளில் செல்லும் மனப்போக்கும் தன்புத்திக்குறைவால் தன்னிடம் இருந்த சொத்துக்களையும் இழந்து விடுதலும் மந்த புத்தியின் காரணமாக தன்னுடைய சுகபாக்கியங்கள் எல்லாவற்றையும் இழந்து அலையும்படியான வாழ்க்கையும் உண்டாகும்.

ஆறாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் அன்னிய ஸ்திரீகளைச் சுற்றி அலைவதும் பாவசிந்தையும் புத்திர சோகங்களும் அன்னியரின் சொத்துக்களைத்தான் அடைதலும் உண்டாகும்.

ஏழாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் மனைவியை இழந்து விடுதலும் அல்லது மனைவியிடம் விருப்பமின்மையும் உடல் நலக்குறைவும் சக்தி இன்மையும் பொருள் நஷ்டங்களும் உண்டாகும்.

எட்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் கெட்ட நடத்தையும் பெண்களால் பொருள் விரயமும் பாவகாரியங்களில் மனம் பிரவேசித்து அலைதலும் நரகத்தை அடையும் படியான பாவங்களைச் செய்தலும் உண்டாகும்.

ஒன்பதாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தந்தைக்கு மரணம், தந்தை வழி சொத்துக்களை இழத்தல், பெரிய காரியங்களில் ஆர்வமும் முயற்சியும் இல்லாமை கிடைத்தது போதும் என்ற அக்கறை இல்லாமல் வாழ்க்கையை நடத்திக்கொண்டு போகும் தன்மை, முதலானவை உண்டாகும்.

பத்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் அன்னியர் காரியங்களைச் செய்வதன் மூலம் லாபம் உண்டாகும். புத்திரபாக்கியம் இராது. தனக்கென்று தொழில், புகழ் சொத்துக்கள் முதலாவை இல்லாமல் இன்னொருவர் ஆதரவில் வாழ்க்கை நடத்தும் படியாக நேரிடும்.

பதினொன்றாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தாம்பத்திய சுகம் இல்லாமலும் புத்திரபாக்கியம் இல்லாமலும் வாழ்க்கை நடத்த நேரிடும் சொத்து சுகம் இருந்த போதிலும் அனுபவிக்க வாய்ப்பு ஏற்படாது.

பன்னிரெண்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் அன்னியருடைய சொத்துக்கள் மனைவியரை அடைவதும் பாவச் செயல்களில் நாட்டமும் அவற்றில் வெற்றியும் உண்டாகும் தன் பிள்ளைகளால் துக்கமும், பொருள் நாசமும் உண்டாகும் மனைவி மக்களுடன் விரோதமும் குடும்பத்தை விட்டு பிரிந்து அன்னிய ஸ்திரீயிடம் போய் சேர்ந்து விடும்படியான நிலைமையும் ஏற்படும்.




0 comments:

Post a Comment