சிவன் கோவில் : ஆத்தூர்

காயநிர்மலேஸ்வரர் திருக்கோவில் - ஆத்தூர் (கோட்டை).






தல வரலாறு



ராமபிரானின் குலகுருவான வசிஷ்டர், ஒரு சமயம் இப்பகுதியில் தவம் செய்தார். அப்போது அவரது தவத்திற்குப் பல இடையூறுகள் வந்தன. என்ன செய்வது என்று அவர் யோசித்தபோது, பூவும் நீரும் கொண்டு சிவபூஜை செய்தால், தீரும் இடர் யாவும் என்று யோசனை சொன்னார், நாரதர்.

அப்படியே சிவபூஜை செய்ய எண்ணிய வசிஷ்டர், தனது பெயரால் வசிஷ்டநதி எனும் தீர்த்தத்தினை உண்டாக்கிய பின், பூஜை செய்யத் தகுந்த இடம் தேடினார். அப்போது மேடான ஓரிடத்தில் அவரது கால் தடுக்கியது. திடுக்கிட்டுப் பார்த்த வசிஷ்டர், மேடான இடம் அந்த இடத்தில் பூமியில் இருந்து முளைத்த சிவலிங்கம் போல இருப்பதைக் கண்டார்.

அதுவே சிவ வழிபாட்டிற்கு ஏற்ற இடம் என உணர்ந்து அங்கேயே அமர்ந்தார். பூஜைகளை ஆரம்பித்தவர், தமது கால் இடறியதால் சிவலிங்க வடிவில் சற்று பின்னம் ஏற்பட்டிருப்பதைப் பார்த்தார். பழுதான திருவடிவை பூஜிக்கலாமா? அவர் தயங்க, ஓர் அசரீரி எழுந்தது.

வசிஷ்ட மாமுனிவரே, நீர் தயங்காமல் பூஜை செய்யும். நிறைவாக நீர் தீபம் காட்டுகையில் ஓர் அதிசயம் நிகழும்..! அசரீரி சொன்னதை அரன் சொன்ன தாகக் கருதி ஆராதனைகளை ஆரம்பித்தார் முனிவர். சிவலிங்கத் திருமேனிக்கு அர்ச்சனை, ஆராதனைகளை முடித்து கடைசியாக தீப ஆராதனை காட்டிய வசிஷ்டர், அப்போது எழுந்த பிரகாசமான ஒளியால் ஒரு விநாடி கண்களை மூடினார். அவர் கண்களைத் திறந்தபோது பளீர் என்று ஓர் ஒளி நிறைந்திருந்தது அங்கே.

பழுதடைந்த லிங்கத் திருமேனி இருந்த இடத்தில் குறை ஏதும் இல்லாத பளபளப்பான லிங்கத் திருமேனி இருந்தது. வசிஷ்டர், தாம் ஏற்றிவைத்த தீபத்தின் ஒளியே அந்த லிங்கத் திருமேனியில் பட்டு பிரதிபலித்து பேரொளியாகத் திகழ்வதைக் கண்டார். அந்த ஒளியே வசிஷ்டரின் தவத்திற்கு இடையூறாக வந்த அரக்கர்களின் மாயை இருளை ஓட்டியது.

இன்னல் இருள் ஓட்ட ஜோதி வடிவாக வந்த இடப வாகனனை வணங்கினார் வசிஷ்டர். அந்தத் தலத்திலேயே கோயில்கொள்ளவும் வருவோர் வாழ்வில் வளம் சேர்க்கவும் வேண்டினார். அன்று வசிஷ்டரால் வழிபடப்பட்டவரே இந்த காயநிர்மலேஸ்வரர். காயம் என்றால், உடல். சிவபிரானின் உருவாகத் திகழ்வது சிவலிங்கம். நிர்மலம் என்றால் பழுது இல்லாதது என்று பொருள். 

தமது லிங்கத் திருவடிவில் இருந்த குறையை நீக்கி வசிஷ்டருக்குக் காட்சிதந்ததால், காயநிர்மலேஸ்வரர் ஆனார் இறைவன். கோயிலும் எழுந்தது. காலமாற்றத்தில் மன்னர்கள், சிற்றரசர்கள் என்று பலரால் புனரமைக்கப்பட்டும், சன்னதிகள் பல எழுப்பப்பட்டும் இன்று கம்பீரமாகக் காட்சிதருகிறது கோயில்.


2 comments:

  1. Unknown said...:

    மிகவும் அருமை

  1. Unknown said...:

    மிக அருமை

Post a Comment