தசா புத்தி பலன்: தனு பாவகம்

Wednesday 17 September 2014
இரண்டாமாதிபன் தசை/புத்தி




 

இரண்டாமாதிபன் லக்கினத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் பண விஷயங்களிலேயே அதிகமான கவனமாக இருக்கவேண்டும் இல்லையென்றால் பிறர் கண்டனங்களுக்கு ஆளாக நேரிடும். குடும்பத்தை விருத்தி செய்து மேலான நிலைமைக்கு கொண்டு வருவதற்காக பலமான முயற்சிகள் எடுத்துக்கொள்வது. அதனால் நன்மைகளும் உண்டாகும். பிறர் காரியங்களை நிர்வாகம் செய்யும் பொறுப்பு அதாவது மைனர் சொத்துக்களுக்கு கார்டியன் ஆகுதல் அல்லது மற்றவர்களுடைய பண்ணைகள் எஸ்டேட்டுகள் போன்றவற்றை நிர்வாகம் செய்வது போன்ற பொறுப்புகள் உண்டாகும்.


இரண்டாமாதிபன் இரண்டில் இருந்து திசை நடைபெற்றால் பலவிதமான தனலாபங்களும் இரண்டு அல்லது மூன்று செயல்பாடுகளை மேற்கொள்வதும், குடும்பங்கள் உண்டாவதும் தன் வாக்கினால் தொல்லை உண்டாவதும் ஏற்படும்.


இரண்டாமாதிபன் மூன்றாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் அன்னியரின் சொத்துக்கள் மனைவியர் முதலான அனுபவித்தலும் தெய்வ நிந்தை செய்வதும் சகோதரர்களுக்கு பொருட் செலவும் மற்றும் ஜாதகருக்கு தைரிய குறைவும் உண்டாகும். மேற்படி இரண்டாமாதிபன் சுபனாக இருந்தால் அரசியல் கிளர்ச்சிகளில் ஈடுபட்டு பொது நன்மைக்காக பாடுபடுவார். இரண்டாமாதிபன் செவ்வாயாக இருந்து மூன்றாம் இடத்தில் பாவரோடு சேர்ந்து அல்லது பார்க்கப்பட்டு இருந்தால் தைரியமிக்க கொள்ளைக்காரனாவான்.


இரண்டாமாதிபன் நான்காம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் ஆசிரியத் தொழில் அல்லது வாகனத் தொழில் மூலம் தன லாபங்கள் உண்டாகும். தாயாரின் சொத்தை அடைவான். குடும்ப சுகமும் நன்மைகளும் உண்டாகும். தன் சகோரர்களை ஆதரிக்க வேண்டியதாக அல்லது அவர்களுக்காகச் செலவு செய்ய வேண்டியதாக ஏற்படும்.


இரண்டாமாதிபன் ஐந்தாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் புத்தி லாபம், வீட்டிலிருந்தே தொழில் நடத்தி அமோகமான சம்பாத்தியம் அடைதல், லாட்டரி பந்தயம் போன்றவற்றில் வெற்றிகள், தன் காலத்திலேயே தன் பிள்ளைகளுக்குச் சொத்துக்களை எழுதிவைத்தல் அல்லது அவர்களை மேலான நிலைமைக்கு கொண்டு வருதல் போன்ற பலன்கள் ஏற்படும்.


இரண்டாமாதிபன் ஆறாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் எப்பொழுதும் கடனாளியாக இருப்பதும் கடன்களால் தொல்லைகளும் வழக்குகளும் உண்டாவதும் தாய் மாமனால் சகாயமும் உண்டாகும். பகைவரால் பொருட் சேதமும் நஷ்டங்களும் உண்டாகும். முழங்கால்கள் தொடைகளில் வாத ரோகங்கள் அல்லது வேறு விதமான நோய்களும் உண்டாகும்.


இரண்டாமாதிபன் ஏழாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் அந்நியரால் தன லாபங்களும் மனைவியால் சம்பாத்தியமும் உண்டாகும். வைத்தியத் தொழிலில் அல்லது வியாபாரப்பிரதிநிதிப் போன்ற உத்தியோகங்களில் பிரயாணம் செய்வதன் மூலமாக சம்பாத்தியம் ஏற்படும். மனைவிக்கும் தாய்க்கும் அபவாதங்கள் உண்டாகும்.


இரண்டாமாதிபன் எட்டாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் வீடு வாசல் முதலான சொத்துக்கள் நஷ்டமும் தரித்திர வாழ்க்கையும் வெறும் வாய் சாமர்த்தியத்தாலேயே பிழைக்க நேர்வதும், குடும்ப சுகம் கெடுவதும், பின் சகோதரர்களுக்குப் பொருள் விரயமும் கஷ்டங்களும் உண்டாகும்.


இரண்டாமாதிபன் ஒன்பதாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் பலவிதமான வழிகளிலும் தனலாபங்களும் சுகசௌக்கியங்களும் உண்டாகும். பிதுரார்ஜித சொத்துக்கள் விருத்தியாகும். தன் சகோதரர்களுக்கு உதவியும் நன்மையும் செய்ய நேரிடும்.


இரண்டாமாதிபன் பத்தாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் தொழிலில் அமோகமான தனலாபங்களும் புது சொத்துக்களில் நிர்வாகம் தன் கைக்கு வருவதும் அதிகமான காம வேட்கையும் அதன் காரணமாக செலவுகளும் ஒன்றிரண்டு புத்திர சோகங்களும் உண்டாகும். புத்திர பாக்கியம் குறைவு என்றும் சொல்வார்கள்.


இரண்டாமாதிபன் பதினொன்றாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் முதல் இல்லாமலேயே வியாபாரம் நடத்தி அதிகமான இலாபங்களை அடைவதும், பந்தய சூதாட்ட வியாபாரங்கள், பணத்தை வட்டிக்கு விடல் போன்றவற்றில் அதிகமான இலாபங்களும், தன் வாக்கினாலேயே லாபம் அடையும்படியான எழுத்து பேச்சுத் துறைகளால் அதிகமான செல்வப்பெருக்கும் உன்னதமான நிலைமையும் உண்டாகும்.


இரண்டாமாதிபன் பனிரெண்டில் இருந்து தசை /புத்தி நடத்தினால் செல்வம் யாவற்றையும் இழந்து தேசாந்திரம் போக நேர்வதும் அந்நியரின் பராமரிப்பில் இருப்பதும் அல்லது சிறையில் இருக்க நேர்வதும் தன் மூத்த மகனுக்கு நோயின் கஷ்டங்களும் உண்டாகும்.


மேற்படி பலன்களை மற்ற திசைகளில் இரண்டாமாதிபன் புத்தி நடைபெறும் காலங்களுக்கும் இணைத்து பலன்களை அறியவும்.

0 comments:

Post a Comment