தீபாவளி-அறிந்ததும் அறியாததும்

Monday 20 October 2014
தீபாவளி- நாம் அறிந்ததும் அறியாததும்




இணையத்தில் கண்ட இந்த தகவல் உங்களுக்காக.....

தீபாவளி இந்துக்கள் பண்டிகை இல்லை : 

முதலில் தீபாவளி இந்துக்கள் பண்டிகை மட்டுமல்ல என்பது நம் எத்தனை பேருக்குத் தெரியும். தீபாவளி வைணவர்களால் மட்டும் கொண்டாடப்படவில்லை, மாறாகச் சமணர்கள், சீக்கியர்களால் கூடக் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆனால் காரணங்கள் மட்டுமே வேறாகும். இன்றைய நிலையில் இந்து மதத்தில் உள்ள சைவர்கள் உட்பட அனைவரும், சில இந்திய கிறித்தவர்களும், சில இந்திய முஸ்லிம்கள் கூடத் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். 

தீபாவளி ஒரு நாள் பண்டிகை இல்லை : 

தீபாவளி என்பது கார்த்திகை மாதத்தின் முதல் மறைமதி ( அமாவாஸ்ய ) நாட்களில் பதின்மூன்றாம் நாள் தொடங்கி முழுமதி ( பௌர்ணமி ) இரண்டாம் நாள் வரை ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். 

தீபாவளி சைவர்களால் : 

தீபாவளி முழுமையாக வைணவர்களால் கொண்டாடப்பட்ட பண்டிகை ஆகும். ஏனெனில் ஐந்து நாள் பண்டிகை முழுமையும் வைணவ கடவுளர்களைப் போற்றியே பூசைகள் செய்யப்படுகின்றது. சைவர்களால் பழங்காலத்தில் தீபாவளி கொண்டாடப் பட்டமைக்கான சான்றுகள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. ஆனால் பிற்காலங்களில் தீபாவளியை சைவர்கள் கொண்டாடத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக லிங்கயாத சைவர்கள் தீபாவளி தினத்தைச் சன்னபசவண்ண தினமாகக் கொண்டாடுகின்றனர். சில சைவர்கள் தீபாவளித் தினத்தைக் கேதார கௌரி விரதமாகக் கொண்டாடி வருகின்றார்கள். 

தீபாவளி வைணவர்களால் : 

தீபாவளி வைணவர்கள் மத்தியிலேயே வெகுவாகக் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. ஆனால் தீபாவளி தினம் கொண்டாடப்படுவதற்கு வைணவர்கள் சொல்லும் காரணம் இடத்துக்கு இடம் மாறு படுகின்றது. காரணம் ஒரு பண்டிகை கொண்டாடப்படுமானால் ஒரே காரணம் மட்டுமே இருக்க முடியும், ஆனால் வைணவர்கள் பல காரணங்கள் சொல்வதால். இந்தப் புனைவுகள் யாவும் தீபாவளி பண்டிகையோடு பிற்காலத்திலேயே சேர்க்கப்பட்டு இருக்க வேண்டும் என்றே நினைக்கின்றேன். 

1. ராமர், சீதை ஆகியோர் 14 ஆண்டுகள் வனவாசம் முடித்து, இராவணன் என்னும் தென்னாட்டு மன்னனை கொன்ற பின்னர் இலங்கையில் இருந்து திரும்பிய தினத்தை அயோத்திய மக்கள் விளக்கேற்றி வரவேற்ற தினம் தான் தீபாவளி எனச் சில மக்களால் நம்பப் படுகின்றது. 

2. தென்னாட்டை ஆண்ட பாலி என்னும் மன்னனின் செருக்கை அடக்குவதற்காக வாமன வடிவில் விஷ்ணு அவதாரம் எடுத்து தன் ஒற்றைக் காலில் நசுக்கி பாதளத்துக்கு அனுப்பிய தினம் தான் தீபாவளி என ஒரு சில மக்களால் கூறப்படுகின்றது. 

3. காமரூபம் என்றழைக்கப்பட்ட இன்றைய அசாமை ஆட்சி செய்த நரகாசூரன் என்னும் மன்னனை போரில் கிருஷ்ண அவதாரம் எடுத்த விஷ்ணு தோற்கடித்துக் கொன்ற தினத்தையே தீபாவளியாகக் கொண்டாடுவதாகத் தமிழ்நாட்டில் பலரும் நம்பி வருகின்றனர். 

4. கோகுலத்தில் வாழ்ந்த மக்கள் மீது இந்திரன் கடும் மழை பொழிந்ததால் பெருவெள்ளம் ஏற்பட்டதாகவும், அவர்களையும் ஆநிரைகளையும் காப்பாற்ற கோவர்த்தன மலையை ஒற்றை விரலால் குடையாக்கி கிருஷ்ணர் காப்பாற்றிய தினத்தையே தீபாவளியாகக் கொண்டாடியதாக வடநாட்டில் சிலர் நம்பி வருகின்றனர். 

ஆகவே தீபாவளிக்கு ஒரு பொதுவான காரணங்கள் வைணவர்கள் மத்தியில் காணப்படவில்லை. ஆகவே இந்தப் புனைவுகள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டு இருக்கும் என்பது உறுதியாகின்றது. 

தீபாவளி சமணர்களால் : 

பலரும் அறியாத ஒரு விடயம் தீபாவளி சமணர்களால் கூடக் கொண்டாடப்படுகின்றது. சமணர்களின் இறுதி தீர்த்தங்கரர் ஆன மகாவீரர் மோட்சம் அடைந்த தினத்தையே தீபாவளியாகச் சமணர்கள் கொண்டாடுகின்றார்கள். மகாவீரரின் மூத்த சீடரான கணாதர கௌதமர் என்பவர் கேவல ஞானம் அடைந்த தினமும் தீபாவளி என அவர்களால் கூறப்படுகின்றது. 

தீபாவளி குறித்த மிகப் பழமையான குறிப்பு சமண நூல்களிலேயே முதன்முறையாகக் காணப்படுகின்றது. ஆச்சார்யா ஜினசேனர் என்பவர் ஏழாம் நூற்றாண்டில் எழுதிய சக சம்வதம் என்னும் நூலிலேயே முதன்முறையாகத் தீபாவளிக் குறித்த தகவல் காணப்படுகின்றது. 

தீபாவளி சீக்கியர்களால் : 

சீக்கிய மக்களுக்குத் தீபாவளி தினம் முக்கியத் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. சீக்கியர்களின் ஆறாவது குருவான, குரு அர்கோபிந்த் சிங்க என்பவர் சிறையில் இருந்து விடுதலையான தினமாகத் தீபாவளி கருதப்படுகின்றது. 

தீபாவளி பௌத்தர்களால் : 

பௌத்த மதத்துக்கும் தீபாவளிக்கும் முக்கியமான தொடர்புகள் எதுவும் காணப்படவில்லை. இருந்த போதும் தெற்காசியாவில் சில பௌத்தர்களால் தீபாவளி கொண்டாடப்படுகின்றது. முக்கியமாக நேபாளத்தில் வாழும் பழங்குடி நெவார் புத்தர்கள் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். அசோக மாமன்னர் பௌத்த மதத்துக்கு மதம் மாறிய தினமாகத் தீபாவளியாகக் கொண்டாடப்படுகின்றது. இந்தத் தினத்தை அசோக விஜயதசமி என்றழைக்கின்றனர். 

வங்கதேசம், இலங்கையில் வாழும் பௌத்தர்கள் சிலரும் இந்த நாளை கொண்டாடுகின்றனர். ஆனால் மகாயானம், திபெத் பௌத்த பிரிவுகளிலும், தெற்காசியாவுக்கு வெளியே உள்ள பௌத்தர்களில் தீபாவளி காணப்படவில்லை. 

தீபாவளி பட்டாசுகள் அக்பரால் கொண்டு வரப்பட்டவை : 

தீபாவளியில் இன்று முக்கியமாகக் கருதப்படுவது பட்டாசுகள். ஆனால் பழம் இந்திய சமூகத்தில் பட்டாசுகள் இருந்திருக்கவில்லை. முக்கியமாக இந்தியாவை ஆட்சி செய்த முகாலய மன்னர் அக்பர் தமது அரசவையில் தீபாவளிக் கொண்டாடியதாக அய்ன் அக்பரி என்ற நூல் கூறுகின்றது. அதே போலத் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிக்கு முறைகளை அக்பரே முதன் முறையில் அறிமுகம் செய்து வைத்தார் என்றும் கூறப்படுகின்றது. 

தீப ஒளி என்பது அபத்தம் பெயர் : 

அண்மையக் காலமாகத் தமிழ் மயப்படுத்த முனையும் சிலர் தீபாவளி என்பதைத் தீப ஒளி நாள் என்று கூறி வருகின்றனர். ஆனால் அதன் அவசியமே இல்லை எனலாம். ஏனெனில் தீப + ஆவளி என்ற இரு வடமொழி சொல்லே தீபாவளி ஆகும். அதாவது வரிசையாக வைக்கப்படும் விளக்கு அல்லது தீ என்று பொருள் படும். தமிழ் படுத்துவேன் பேர்வழிகளே முதலில் தீபம் என்ற சொல்லே தமிழில்லை, அதுவே வடமொழி, அப்புறம் என்னத்துக்குத் தீப ஒளி மட்டும் தமிழில். பண்டைய தமிழகத்தில் தீபாவளி கொண்டாடப்பட்டமைக்கான சான்றுகள் ஏதும் இல்லை என்பதால் இத்திருவிழா வடநாட்டு ஊடாகவே வந்ததாக நம்புவோமாக. 

தீபாவளி உலகில் இன்று : 

தீபாவளி இன்று இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் எங்கும் உள்ள இந்தியர்களால் கொண்டாடப்படுகின்றது. தீபாவளி தினம் விடுமுறை தினமாக இந்தியா, நேபாளம், சிறீ லங்கா, மியன்மார், மொரிசியஸ், மலேசியா, சங்கப்பூர், கயானா, டிரினிடட் - டொபாகோ, சுரிநாம், பிஜி ஆகிய நாடுகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளில் வாழும் தெற்காசிய மக்கள் பலரும் தீபாவளியை தத்தம் வழக்கங்களுக்கு ஏற்றவாறு கொண்டாடுகின்றனர். 

தீபாவளி இன்று உலகம் முழுவதும் பல்வேறு மதம் சார்ந்த மக்களால் கொண்டாடப்பட்டாலும். இதன் ஆதி தொடக்கம் பாகன் - பழங்குடி சமூகத்தில் இருந்தே தொடங்கப்பட்டு இருக்க வேண்டும். குறிப்பாகத் தீ என்பது குளிரை விரட்டக் கூடியது, இருளை விரட்டக் கூடியது. நவம்பர் மாதம் என்பது வட துருவ நாடுகள் எங்கும் குளிர்காலத் தொடக்கமாகும், பகல் சுருங்கி இருள் நீண்டு இருக்கும். ஆகவே குளிரை விரட்ட, இருளை குறைக்க மக்கள் இப்படியான தீ சார்ந்த திருவிழாக்களைக் கொண்டாடி வந்தமைக்கான குறிப்புக்கள் உலகம் எங்கும் காணப்படுகின்றது. 





(http://www.yarl.com/forum3/index.php?/topic/111176-தீபாவளி-அறிந்தவையும்-அறியாதவை/)



0 comments:

Post a Comment