சந்திரன் தரும் யோகம்

Wednesday 22 October 2014
சந்திரன் தரும் யோகம்





கேளப்பா கலையினுட பெருமை சொல்வேன்

கனமுள்ள தனலாபம் கேந்திரகோணம்

ஆளப்பா அகம்பொருளும் நிலமுங்காடி

அப்பனே கிட்டுமடா கறவையுள்ளோன்

சூளப்பா சுகமுண்டு ஜென்மனுக்கு

சுயதேச பரதேச அரசர்நேசம்

கூளப்பா கொடியோர்கள் சேர்ந்துநோக்க

கொற்றவனே கலைகண்டு கூற்ந்துசெப்பே


சூடப்பா சந்திரனார் மூன்றேழ்ஐந்து

சுத்த இந்து பன்னொன்றில் தனித்திருக்க

மாடப்பா மந்திரங்கள் செய்வன் காளை

மகத்தான வாதமொடு வயித்தியம் செய்வான்

கூடப்பா குடும்பமது விருத்தியாகும்

குவலயத்தின் எதிரிக்கு மார்பிலாணி

வீடப்பா போகருட கடக்ஷத்தாலே

விதியறிந்து புவியோர்க்கு விளம்புவாயே.

அமிர்த கலையை அள்ளி வழங்கும் சந்திர பகவானின் பெருமையையினை இனிக் கூறுகிறேன் கேட்பாயாக! மிகுதியான நன்மை தரும் இரண்டாம் இடத்திலும் இலக்கினத்திற்குப் பதினொன்றாம் இடமான இலாபஸ்தானத்திலும், மற்றும் 1,4,7,10 என்ற கேந்திர ஸ்தானங்களிலும் 1,5,9 என்னும் திரிகோண ஸ்தானத்திலும் சந்திர பகவான் நிற்பாரேயாகில் நல்ல மனையும், நிறைந்த தன வருவாயும் நிலமும், விளை வயலும் கன்று காலிகளும் நிரம்ப வந்தடையும். இச்சாதகனுக்கு மெத்த சுகம் உண்டென்றும் சுயமான தேசத்திலும் பிற தேசத்திலும் வாசஞ்செய்யும் போதும் அரசினரால் ஆதாயம் மிகவும் உண்டாகும்.எனினும் தீயகோள்களை தங்கள் தீட்சண்யமான பார்வையில் நோக்குதலின் உண்மையறிந்து சந்திர பகவானின் கலை தீட்சண்யம் அறிந்து பலன் கூறுக. 

எல்லாராலும் போற்றப்படும் சந்திரபகவான் 3,7,5,11 ஆகிய இடங்களில் தனித்திருக்க, அச்சாதகன் செல்வமுள்ளோன் என்றும் மந்திரங்கள் அறிந்து முறைப்படி பிரயோகித்து வெற்றி காண்பவன் என்றும் வாதம் செய்வதில் வல்லவன் என்றும் வயித்திய சாத்திரத்தில் சிறந்தோன் என்றும் அவனது குடும்பமானது என்றும் விருத்தியடையும் அவனது எதிரிகள் அழிவர் என்றும் எனது சற்குருவான போகரது கருணையாலே புலிப்பாணி அருளியதை புவியோர்க்கு உணர்த்துவாயாக.



0 comments:

Post a Comment